தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே முதலிபாளையத்தில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க. இளைஞரணி மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசினார். இதில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இளைஞரணி துணை செயலாளர் பிரகாஷ், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கடந்த மக்களவை தேர்தலில் ‘களத்தில் இளைஞரணி’ என்ற வாசகத்துடன் பணியாற்றி 100 சதவீத வெற்றியை பெற்றதாகக் குறிப்பிட்ட உதயநிதி, வரும் சட்டசபை தேர்தலிலும் அதே இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்றார். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவும், தேர்தலை ஜனநாயகப் போரெனக் கருதி அனைவரும் தயாராக இருக்கவும் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதாகவும், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மாநிலத்துக்கான நிதியை மத்திய பா.ஜ.க. அரசு வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டிய அவர், டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் அ.தி.மு.க. தலைமையையும் விமர்சித்தார்.
மக்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்; சிறிய தவறுகளையும் எதிராக பெரிதாக்க ஊடகங்கள் காத்திருக்கும் என அவர் எச்சரித்தார். அடுத்த 32 நாட்கள் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும், உண்மையாக உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்க தாம் பொறுப்பெடுப்பதாகவும், வெற்றியை பெற்றுத் தருவது அமைப்பின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.




