புதுடில்லி: பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு விரைவில் அமல்படுத்த மத்திய பா.ஜ. தலைமையிலான அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023-ல் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்பே அமலுக்கு வரும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பில் 2027-ல் தான் கணக்கெடுப்பு பணிகள் முடிவடையும் என்பதால், 2029 லோக்சபா தேர்தலுக்கு முன் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், தாமதத்தை தவிர்க்க 2011 கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு சட்டத்தை அமல்படுத்தும் வழியில் மத்திய அரசு செல்லலாம் என கூறப்படுகிறது.

தகவலின்படி, லோக்சபா மொத்த இடங்கள் 543-லிருந்து 816-ஆக உயர்த்தப்படும்; இதில் 33% எனும் அளவில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும் அடுத்த வாரம் ராஜ்யசபாவில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல். 2023 சட்டத்தின் பிரிவு 5 புதிய கணக்கெடுப்புடன் அமல்படுத்தலை இணைத்துள்ளதால் அதில் திருத்தம் தேவைப்படும். அரசியலமைப்பின் 368(2) பிரிவின்படி இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அவசியம் என்பதால், கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு முக்கியமாகும்.