சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் (தே.ஜ.) பா.ஜ.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து இறுதிப்படுத்தும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. கூட்டணியில் பா.ஜ.க.க்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல், மூத்த நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை நடத்தினார். இதில் எந்தெந்த தொகுதிகளை கோருவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளதால், விரைவாக விருப்பத் தொகுதி பட்டியலை வழங்குமாறு அ.தி.மு.க. தரப்பில் இருந்து பா.ஜ.க.க்கு தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பீயூஷ் கோயல், மூத்த நிர்வாகிகளுடன் இரண்டாவது நாளாக ஆலோசனையை தொடர்ந்தார். இதில் பங்கேற்ற தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவையிலிருந்து சில விஷயங்களை பேச வரச் சொல்லப்பட்டதாகவும், தாம் யாரிடமும் ‘சீட்’ கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, பா.ஜ.க.க்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் ஒன்றை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்கலாம் என கூறப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாறன் தெரிவித்துள்ளார்.