புதுடில்லி: பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய ஆயுதக் கடத்தல் கும்பலை டில்லி போலீசார் குற்றப்பிரிவு சோதனையில் கண்டுபிடித்து, 10 முக்கிய சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் மொத்தம் 21 உயர்ரக வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்கப்பட்டன. சிறப்புப் படைகள் பயன்படுத்தும் வகையிலான PX-5.7 கைத்துப்பாக்கிகள் மற்றும் PX-3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

விசாரணையில், இந்த ஆயுதங்கள் இந்தியா–நேபாள எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தப்பட்டு, டில்லி மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் குற்றக் கும்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, கடத்தல் வலையமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையால் பெரிய அளவிலான சதி முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.