வரும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.க்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தே.மு.தி.க.க்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து இன்று மற்றும் நாளை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும் என்றார். மார்ச் 27-ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்; ஏப்ரல் 1-ம் தேதி மனுத் தாக்கல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகள் அடங்கிய உத்தேச பட்டியலை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளதாக கூறினார். அதில் விஜயகாந்த் முதன்முறையாக வென்ற விருத்தாசலம், சென்னை விருகம்பாக்கம் மற்றும் மக்களவை தேர்தலில் விஜயபிரபாகரன் போட்டியிட்ட விருதுநகர் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார். கூட்டணியில் சேர தாங்கள் கேட்ட தொகுதி எண்ணிக்கை வேறு என்றும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் விட்டுக் கொடுத்து 10 தொகுதிகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
கூட்டணி தர்மத்தின்படி அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக தே.மு.தி.க. உழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.




