திருவள்ளூர் அருகே இன்ஜினியரிங் கல்லூரி அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்ட நிலம், பின்னர் தனிநபர்களுக்கு ரூ.14 கோடி வரை விற்கப்பட்டதாக கத்தோலிக்க சிறுபான்மை நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
நலச்சங்கத்தின் தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் ஜூலியட் மற்றும் ஆல்பர்ட் குடும்பத்தினர், பன்னூர் அருகே உள்ள 8 ஏக்கர் 51 சென்ட் நிலத்தை 2013 ஜூலை 24 அன்று டான் போஸ்கோ சலேசியன்ஸ் அமைப்புக்கு தானமாக வழங்கினர். அப்போது அந்த நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என கூறப்படுகிறது.
ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக இன்ஜினியரிங் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தானம் அளிக்கப்பட்டதாக நலச்சங்கம் தெரிவித்தது. மேலும், 2013 ஆகஸ்ட் 13 அன்று வெளிநாடுகளில் இருந்த குடும்பத்தினர் தமிழகம் வந்து, குறிப்பிட்ட இடத்தில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், 2013 ஆகஸ்ட் 20 அன்று நிபந்தனைகள் தொடர்பான ஆவணங்களில் கையெழுத்திடப்பட்ட நிலையில், தானம் வழங்கியவர்களுக்கு தெரியாமல் அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ஒரு தனிநபருக்கு பவர் ஆப் அட்டர்னி வழங்கப்பட்டு, அவர் நிலத்தை துண்டுகளாகப் பிரித்து விற்றதாகவும் நலச்சங்கம் கூறுகிறது.
நலச்சங்கத் தலைவர் எஸ்.ஜெசுராஜ், நிர்வாகத் தலைவர் பெர்னாண்டோ, செயலர் ஜோசப் ஆகியோர் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், சென்னை–மயிலாப்பூர் பேராயர் மற்றும் இந்தியாவுக்கான அமைப்பின் தூதருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், நிபந்தனைகளை நீக்கியவர் யார், விற்பனைக்கு காரணமானவர் யார் என்பதைக் கண்டறிய ரோமில் உள்ள சலேசியன் சபை தலைமை பேராயர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். தற்போது 60 முதல் 90 வயதுக்குள் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை அனைத்து வழிகளிலும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.




