புதுடில்லி: நாட்டின் எல்.பி.ஜி. இறக்குமதி சார்பை குறைக்கும் நோக்கில், எத்தனாலை சமையலுக்கான மாற்று எரிபொருளாக உருவாக்க எத்தனால் உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும் என பெட்ரோலியத் துறை வலியுறுத்தியுள்ளது.

அகில இந்திய எத்தனால் உற்பத்தியாளர் சங்க மாநாட்டில் பேசிய பெட்ரோலிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ரவி, எத்தனால் எரிபொருளில் இயங்கும் சமையல் அடுப்புகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார். எல்.பி.ஜி. சாதன ஆய்வு மையம் மற்றும் பல்வேறு ஐ.ஐ.டி. நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளன; இந்த அடுப்புகளின் மாதிரிகள் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

சமையலுக்கு எத்தனால் பயன்பாடு நடைமுறைக்கு வந்தால், சமையல் எரிவாயு இறக்குமதியை சார்ந்திருப்பது குறையக்கூடும் என அவர் குறிப்பிட்டார். இதற்காக அடுப்பு தயாரிப்பாளர்களுடன் எத்தனால் உற்பத்தித்துறை இணைந்து செயல்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வீட்டுக்கும் எத்தனால் எரிபொருள் விநியோகத் தொடரை கட்டுப்படியாகும் செலவில் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தற்போது கணிசமான அளவில் எத்தனால் உற்பத்தி செய்து, பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாகவும், இதில் மாற்றம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். நாடு தழுவிய சமையல் எரிபொருளாக எத்தனாலை மாற்றும் முயற்சிக்கு எத்தனால் உற்பத்தியாளர்களின் ஆலோசனைகள் தேவை என்றும் தெரிவித்தார்.

மேலும், டீசலில் கலப்பதற்கான ஐசோபியூட்டனால் உற்பத்தியை அதிகரிப்பதும், விமானங்களுக்கான நீடித்த எரிபொருள் தயாரிப்புக்கான நடவடிக்கைகளையும் எத்தனால் தயாரிப்பு துறையினர் முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.