உலக எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்ட தடையால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளதுடன், பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவசர கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது நடத்தும் போர் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் கிடைப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்கம் ஆசியாவைத் தாண்டி வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் ஆப்ரிக்கா, ஐரோப்பிய பகுதிகளுக்கும் பரவியுள்ளது. செய்தி விவரப்படி பாகிஸ்தானில் எரிபொருள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் 25 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. காஸ் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் நிலக்கரி பயன்பாட்டை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பல இடங்களில் வாகன இயக்கக் கட்டுப்பாடு, மின்சாரப் பயன்பாட்டுக் கட்டுப்பாடு, வேலை நேரக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன; தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் நிலக்கரி உற்பத்தியை உயர்த்தும் முயற்சிகளையும் எடுத்துள்ளன.

கட்டுப்பாடுகளில் சில: பாகிஸ்தான் பள்ளி, கல்லூரிகளை 2 வாரம் மூடவும், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை மற்றும் 50% பேருக்கு வீட்டிலிருந்து பணி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இலங்கை நடுவார விடுமுறை அறிவித்து, க்யூஆர் கோடு அடிப்படையிலான எரிபொருள் அட்டையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கதேசம் பல்கலைக்கழகங்கள் மற்றும் சில பள்ளிகளை ஆன்லைனில் நடத்த உத்தரவிட்டு, மார்ச் 8 முதல் வாகனங்களுக்கு எரிபொருள் அளவை கட்டுப்படுத்தி, 5 மணி நேர சுழற்சி முறை மின்வெட்டு அமல்படுத்தி, காஸ் தட்டுப்பாட்டால் உரத் தொழிற்சாலைகளை மூடியுள்ளது. பூடான் கேன்களில் எரிபொருள் விற்பனைக்கு தடை விதித்து அவசர சேவைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது; மியான்மர், கம்போடியா நாடுகளில் ஒற்றை-இரட்டை எண் வாகன நடைமுறை அமல்; லாவோஸில் பல நிலையங்கள் மூடப்பட்டு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து வாரம் ஒரு நாள் ‘கார் பயணம் இல்லாத நாள்’ நடைமுறையை மீண்டும் கொண்டு வர திட்டமிடுவதாகவும், விமான எரிபொருள் பற்றாக்குறையால் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஸ்லோவாக்கியா வெளிநாட்டினருக்கு விலையை உயர்த்தி கூடுதல் டீசல் வாங்குவதற்கு வரம்பு விதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.