சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து, மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை வேட்பாளராக நிறுத்த அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2011 முதல் கொளத்தூரில் ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். இம்முறையும் அவர் நான்காவது முறையாக அந்தத் தொகுதியில் களமிறங்கலாம் என கூறப்படுகிறது. முந்தைய தேர்தல்களில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, ஜே.சி.டி. பிரபாகர், ஆதிராஜாராம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இம்முறை பொற்கொடியை முன்னிறுத்தும் வாய்ப்பை கட்சி பரிசீலித்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் 2006 சென்னை மாநகராட்சி தேர்தலில் கொளத்தூர் வட்டாரத்துக்குட்பட்ட ஒரு வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வென்றவர்.
பின்னர் அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்து, பட்டியலின மக்களை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும், கொளத்தூர் பகுதியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் 2024 ஜூலை 5 அன்று படுகொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பொற்கொடி “தமிழ் மாநில பகுஜன் சமாஜ்” என்ற புதிய கட்சியை தொடங்கி, கணவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடி வருகிறார். இதனால் ஸ்டாலினுக்கு அவர் கடும் போட்டியை உருவாக்கக்கூடும் என்றும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் பழனிசாமி கருதுவதாக தகவல் தெரிவிக்கிறது.




