புதுடில்லி: மேற்காசிய போர் சூழல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த தகவலை இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் பகிர்ந்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் நான்காவது வாரமாக நீடிப்பதால் உலகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உலக எரிபொருள் வினியோகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர்.
உரையாடலில் ஹார்முஸ் ஜலசந்தி முக்கியமாக பேசப்பட்டது. உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அந்தப் பகுதி எப்போதும் திறந்து இருக்க வேண்டிய அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தினர்.
இந்த உரையாடலை பிரதமர் மோடியும் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அது பயனுள்ளதாக இருந்ததாக குறிப்பிட்டார். மேற்காசிய பிராந்தியத்தில் விரைவில் அமைதி ஏற்பட இந்தியா முழு ஆதரவு அளிக்கும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பதும் எப்போதும் திறந்து வைத்திருப்பதும் உலக நாடுகளுக்கு முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹார்முஸ் ஜலசந்தி மீது உலக கவனம் திரும்பியுள்ள சூழலில், இந்தியா-அமெரிக்க தலைவர்கள் நடத்திய இந்த ஆலோசனை மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.




