கொச்சி: பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் பரவலாக அறியப்பட்ட மோனாலிசா போஸ்லே, தனது முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் தொல்லை தந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
கொச்சியில் நிருபர்களிடம் பேசிய மோனாலிசா, தனது அறிமுக படம் தி டைரி ஆப் மணிப்பூர் என தெரிவித்தார். படப்பிடிப்பு நேரங்களில் இயக்குநர் பலமுறை தவறான நோக்கத்துடன் தன்னை அணுகியதாகவும், நேபாளம் மற்றும் டேராடூன் உள்ளிட்ட இடங்களில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டும் கூறினார். தாம் அதை எதிர்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை அப்போதே குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் முதல் படம் என்பதால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், பணமே அவர்களின் முன்னுரிமை எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், சினிமா வாய்ப்பு தருவதாக கூறி திரைப்படத் துறையின் பெயரை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும், சிறுமிகளிடமும் மோசமாக நடந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
தமக்கும் தமது துணைக்கும் பல இடங்களில் இருந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், சொந்த ஊருக்கு செல்ல அஞ்சுவதாகவும் கூறிய மோனாலிசா, கேரளாவிலேயே தொடர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும், மோனாலிசாவின் காதல் திருமணத்தை “லவ் ஜிகாத்” என இயக்குநர் சனோஜ் மிஸ்ரா முன்பு குற்றம்சாட்டியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




