முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை ‘துரோகம், தோல்வியின் அடையாளம்’ எனக் கடுமையாக விமர்சித்து, அவரை அரசியலில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசினார். வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி சாதனை வெற்றி பெறும் என்றும், பழனிசாமி அணியினர் டிபாசிட் இழப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

நலத்திட்டங்களை குறிப்பிட்டு, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.5,000 வரவு வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் “இன்ப அதிர்ச்சி” அளித்ததாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகான நிகழ்வுகளை நினைவுபடுத்திய அவர், சசிகலா தன்னை முதல்வராக்கியதாகவும், அவர் கூறியவுடன் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறினார். பின்னர் முதல்வராக வந்த பழனிசாமி, சசிகலாவின் கணவர் இறந்த நேரத்தில் அவருக்கு பரோல் வழங்கக் கூடாது என்று மறுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சாத்தான்குளம் கொலை வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதாக கூறிய பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி வருத்தம் கூட தெரிவிக்கவில்லை என விமர்சித்தார். கூட்டத்திற்கு எம்.பி. தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார்; எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாநில உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.