தாயார் சோனியா காந்தி உடல்நலக் காரணமாக டில்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் மேற்கொள்ள இருந்த தனது பிரசார சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார்.
கேரள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் இன்று பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டிருந்தார். கோழிக்கோட்டில் மாலை 4.30 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராகுலை வரவேற்க மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த நிகழ்ச்சி திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இதற்கான காரணம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் தரப்பின் தகவலின்படி, சோனியா காந்தி டில்லி கங்கா மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்; தற்போது அவர் நலமுடன் உள்ளார். ராகுல் வராததால், கோழிக்கோடு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




