ஆயுதப்படைகளில் பெண் அதிகாரிகளின் மதிப்பீடு மற்றும் பணிநிலை முன்னேற்றத்தில் பாகுபாடு இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி (Permanent Commission) மற்றும் ஓய்வூதிய உள்ளிட்ட பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

குறுகிய கால சேவை ஆணையம் (Short Service Commission) கீழ் அதிகாரிகள் 10 ஆண்டுகள் பணியமர்த்தப்படுவர்; இது 14 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம். அதன் பின்னர் நிரந்தர பணி வழங்கப்படாவிட்டால் அவர்கள் பணியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்; இதனால் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காது. நிரந்தர பணி ஆணையத்தில் நியமிக்கப்படுவோர் ஓய்வு பெறும் வரை பணியாற்றி, பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய பலன்களை பெறுவர்.

இந்த நிலையில், நிரந்தர பணிக்கு தங்களைத் தேர்வு செய்யும் முறையே பாரபட்சமாக இருப்பதாகக் கூறி சில பெண் அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் உஜ்ஜல் புயான், என்.கோட்டீஸ்வர் சிங்) வழக்கை விசாரித்து, நிரந்தர பணியிடங்கள் ஆண் அதிகாரிகளுக்கே உரியது என்ற எதிர்பார்ப்பு இனி இருக்க முடியாது எனக் கூறியது.

பெண் அதிகாரிகளின் ஆண்டு ரகசிய அறிக்கைகள் உரிய கவனமின்றி சாதாரணமாக மதிப்பிடப்பட்டதாகவும், அவர்கள் ஒருபோதும் நிரந்தர பணிக்கு தகுதியடைய மாட்டார்கள் என்ற முன்கூட்டிய அனுமானம் மதிப்பீட்டில் ஊடுருவியதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது. தகுதியுள்ள பெண் அதிகாரிகள் 20 ஆண்டுகள் தகுதியான சேவையை முடித்தவர்களாகக் கருதப்பட்டு, ஓய்வூதியம் மற்றும் தொடர்புடைய அனைத்து பலன்களும் வழங்கப்பட வேண்டும்; முன்பு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும் என உத்தரவிட்டது.

அதே நேரத்தில், 2019, 2020, 2021 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு வாரியங்கள் மூலம் வழங்கப்பட்ட நிரந்தர பணிகள் மாற்றப்படாது என்றும் அமர்வு தெரிவித்தது. மேலும், ஆண்டுக்கு 250 பெண்களுக்கு மட்டுமே நிரந்தர பணி என்ற உச்ச வரம்பு தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதும் எனக் கூறி அதை ரத்து செய்து, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழான அதிகாரத்தை பயன்படுத்தி உத்தரவு பிறப்பித்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.