சிக்கிமில் இடைவிடாமல் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் வடக்கு சிக்கிமில் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சுற்றுலா வழித்தடமான லாச்சென்–சுங்தாங்க் சாலையில் முன்ஷிதாங் பகுதியில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக அந்தப் பாதையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மழை தொடர்வதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுங்தாங்க் பகுதியில் சுமார் 200 சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுங்தாங்கில் இருந்து மங்கன் பகுதிக்கு பெய்லி பாலம் வழியாக சுற்றுலா பயணிகளை மாற்றுப்பாதையில் அழைத்து சென்று, பின்னர் தலைநகர் காங்டாகிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிலவரத்தை ஆய்வு செய்த பிறகே அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என தெரிவித்து, மாநில அரசு தற்காலிகமாக சுற்றுலா பயணத்திற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.