தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை “பாஜ ஜாடிக்கு ஏற்ற மூடி” எனக் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னைகளைப் பேசாமல் தங்களைத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்ட நிலையில், மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தன் அறிக்கையில், கோவிட் காலத்தை நினைவூட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்டாலின் கூறினார். இதன் காரணமாக பல உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்னைக்கு தீவிர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜ அரசு, செய்திகளைத் திசைதிருப்புவதற்காக தொகுதி மறுவரையறை “ஸ்கிரிப்ட்”-ஐ தற்போது கையிலெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், சிலிண்டர் வழங்குவதும் வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக கூறினார். இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பாஜ அரசு என்ன செய்கிறது என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி எனவும் அவர் தெரிவித்தார்.




