சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தி வெற்றியைத் தடுக்க நினைத்தவர்களின் எண்ணங்கள் தோல்வியடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், தொகுதிப் பங்கீடு குறித்து கற்பனை விமர்சனங்களும் வதந்திகளும் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியினருக்கான கடிதத்தில், கூட்டணி அரசியலில் தொகுதிகளை உரிமையுடன் கேட்பதும், அவற்றை பரிசீலித்து வழங்குவதும் இயல்பான நடைமுறை என ஸ்டாலின் கூறினார். அந்தச் செயல்முறையை ஜனநாயகத் தன்மையுடன் திமுக தலைமையிலான கூட்டணி நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மதச்சார்பின்மை, மாநில உரிமை, சமூகநீதி, சமத்துவம் ஆகிய அடித்தளங்களில்தான் இந்தக் கொள்கைக் கூட்டணி இயங்குகிறது என்றும், ஒன்றிய பா.ஜ.க. அரசின் மதவாத அரசியலை எதிர்த்து திமுகவுடன் கூட்டணி கட்சிகள் தோளோடு தோள் நிற்கின்றன என்றும் அவர் கூறினார்.
வதந்திகளால் திசைதிருப்ப முயல்வதை திமுகவினர் புறக்கணித்து, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அடுத்த நான்கு வாரங்கள் அயராமல் உழைத்து, மக்களிடையேயுள்ள செல்வாக்கை வெற்றியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2026 சட்டசபைத் தேர்தலில், கூட்டணி கட்சிகள் தங்கள் சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் இணைந்து 175 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காணும் என அவர் குறிப்பிட்டார். மேலும், கூட்டணியின் சின்னங்களும் ஒரே வெற்றிப் பயணத்தின் பகுதியாகும் என்றும், 234 தொகுதிகளும் கூட்டணியின் களமே என்றும் அவர் தெரிவித்தார்.




