திரிணமுல் காங்கிரசுடன் தொடர்புடைய தேர்தல் வியூக நிறுவனம் ‘ஐ-பேக்’ கொல்கட்டா அலுவலகத்தில் அமலாக்கத்துறை (ED) நடத்திய சோதனை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை காரசாரமான விசாரணை நடைபெற்றது.
கடந்த ஜனவரி 8 அன்று ‘ஐ-பேக்’ அலுவலகத்திலும் அதன் தலைவர் பிரதீக் ஜெயின் இல்லத்திலும் நடந்த சோதனையின் போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் சென்று நடவடிக்கையைத் தடுத்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் சில கோப்புகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இந்த தடை குறித்த புகாரில் சி.பி.ஐ. விசாரணை கோரி அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு, “சோதனையைத் தடுத்ததாக முதல்வரே குற்றச்சாட்டில் இருக்கும்போது, அதே அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மாநில போலீசிடம் சென்று தீர்வு கேட்பது எப்படி பயனுள்ள வழியாக இருக்கும்?” என கேள்வி எழுப்பியது.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் இந்தியக் குடிமக்களே; அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது உச்ச நீதிமன்றத்தை அணுக உரிமை உண்டு என அமர்வு குறிப்பிட்டது. மாநில அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ஷியாம் திவான், “அமலாக்கத்துறை ஒரு தனிநபர் அல்ல; அரசு அமைப்பு. ஆகவே அடிப்படை உரிமை மீறல் எனக் கூறி அரசமைப்புச் சட்டம் 32-வது பிரிவின் கீழ் மனு தாக்கல் செய்ய அதிகாரம் இல்லை; இத்தகைய விவகாரங்களை மத்திய அரசு 131-வது பிரிவின் கீழ் மட்டுமே கொண்டு வர முடியும்” என வாதிட்டனர்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.




