ஹைதராபாதில் நடத்த திட்டமிடப்பட்ட ‘பார்முலா-இ’ கார் பந்தயத்துடன் தொடர்புடைய அரசு பணம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில், தெலுங்கானா ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முன் பி.ஆர்.எஸ். ஆட்சிக் காலத்தில், 2024ல் தலைநகர் ஹைதராபாத்தில் இந்த போட்டியை நடத்த திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம் (HMDA) மூலம் ரூ.55 கோடி வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் தொடர்ச்சியாக அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பி.ஆர்.எஸ். செயல் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராமா ராவ், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அரவிந்த் குமார், HMDA முன்னாள் தலைமை இன்ஜினியர் பி.எல்.என். ரெட்டி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், ராமா ராவ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.