புதுடில்லி: மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கான திட்டத்தை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2023ல் நிறைவேற்றப்பட்ட ‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ மூலம் பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இது அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய கணிப்புகளின்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் தான் முடிவடையும் என்பதால், 2029 லோக்சபா தேர்தலுக்குள் இடஒதுக்கீடு அமலாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை விரைவுபடுத்த 2011 கணக்கெடுப்பு அடிப்படையில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு விரும்புவதாகவும் கூறப்பட்டது.

அந்த வழிமுறையில் லோக்சபா மொத்த இடங்கள் 543லிருந்து 816 ஆக உயர்ந்து, அதில் 33% எனும் அளவில் சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இத்தகைய திருத்தங்களை கொண்டு வருவதற்கான முடிவை தற்போது நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் கூறுகிறது.

லோக்சபா அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டதாகவும், தேவையெனில் பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி திருத்த மசோதாவை தாக்கல் செய்யலாம் அல்லது வரும் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.