தி.மு.க. அமைச்சர்களின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி த.மா.கா.க்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கியதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கட்சிக்குள் ஒரு பகுதி நிர்வாகிகளிடையே கொதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

அவர்களது கூறுகையில், கூட்டணியில் ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா.க்கு ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, ஒட்டன்சத்திரம், கும்பகோணம், கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ராணிப்பேட்டை தற்போது தி.மு.க. அமைச்சர் காந்தி பிரதிநிதித்துவம் செய்யும் தொகுதி எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ராணிப்பேட்டையில் அ.தி.மு.க. மாவட்டச் செயலராக உள்ள சுகுமார், முன்பு காங்கிரசில் இருந்தபோது காந்திக்கு தலைமை பூத் ஏஜென்டாக இருந்தவர் என்பதால், அமைச்சரை எதிர்த்து போட்டியிட விரும்பவில்லை என்றும், பழனிசாமியுடன் பேசி அந்தத் தொகுதியை த.மா.கா.க்கு மாற்றியதாகவும் அவர்கள் கூறினர்.

ஈரோடு மேற்கு தொகுதியில் தி.மு.க. அமைச்சர் முத்துசாமி மற்றும் பழனிசாமி நெருக்கமாக இருப்பதாகவும், இருவரும் தூரத்து உறவினர்கள் எனவும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அமைச்சருக்கு எதிராக பழனிசாமி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும், அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தாமல் அந்தத் தொகுதியையும் த.மா.கா.க்கு ஒதுக்கியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஒட்டன்சத்திரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் தி.மு.க. அமைச்சர் சக்கரபாணி நெருக்கம் காரணமாக, சக்கரபாணிக்கு சாதகமாக அந்தத் தொகுதியும் த.மா.கா.க்கு தள்ளிவிடப்பட்டதாக அவர்கள் கூறினர். ஜெயலலிதா காலத்தில் தி.மு.க.வுடன் நெருக்கம் என்ற தகவல் வந்தாலே கடுமையாக நடவடிக்கை எடுத்ததாக நினைவூட்டி, தற்போது அமைச்சர்களுக்கு ஆதரவாக செயல்படுவது கட்சிக்கு ஆபத்தானது என்றும் அவர்கள் விமர்சித்தனர்.