மேற்காசியப் பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு டில்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவித்தது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு இருப்பு தற்போது போதுமானதாக உள்ளதால், பொதுமக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழித்தடத்தில் தடையுண்டாகலாம் என்ற அச்சம் உள்ளிட்ட காரணங்களால், இந்த விவகாரத்தை விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து நடந்த கூட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்; உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். கேரளாவில் இருப்பதால் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் வந்திருந்த நிலையில், திரிணமுல் காங்கிரஸ் சார்பில் எவரும் பங்கேற்கவில்லை.

மேற்காசிய நிலையற்ற தன்மையை மீறியும், அத்தியாவசிய எரிபொருட்களை ஏற்றி மேலும் பல கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்ற தகவலையும் அதிகாரிகள் பகிர்ந்தனர். மோதல் தீவிரமடைந்தால் தயார்நிலை என்ன, கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு இருப்பு எப்படி என்ற கேள்விகளுக்கு பதிலளித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, நாட்டின் சமையல் எரிவாயு தேவையில் சுமார் 60% உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாகவும், மீதியை இறக்குமதி மற்றும் திட்டமிட்ட விநியோகத்தின் மூலம் நிர்வகிப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில், இந்த விவகாரம் விளக்கக் கூட்டத்துடன் முடிவடையாமல், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் முறையான விவாதமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. கூட்டத்தின் வடிவத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த கார்கே, பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.