நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் செயல்படும் முறையில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு இருப்பதாக கூறி, தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் ஒன்று பட்டியல் சமூக குழந்தைகளுக்காகவும் மற்றொன்று பிற்படுத்தப்பட்ட சமூக குழந்தைகளுக்காகவும் தனித்தனியாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

21ம் நூற்றாண்டிலும் இவ்வாறு ஜாதிப் பிரிவினை தொடர்வது வெட்கக்கேடானது என்றும், ஏதுமறியா குழந்தைகளிடையே பிரிவினையை விதைக்கும் இந்த நடைமுறை அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானம் என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தனை ஆண்டுகளாக இதை கவனிக்காமல் இருப்பது அரசின் முழுமையான தோல்வியை காட்டுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த பிரிவினை முறையை உடனடியாக நிறுத்தி, அனைத்து குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தினார்.