தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை இறுதி செய்ய சென்னை கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அ.தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் பாஜ, பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தொகுதி பங்கீட்டில் பாஜக்கு 27, பா.ம.க.க்கு 18, அ.ம.மு.க.க்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டவை போக மீதமுள்ள 169 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரத்தை அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) வெளியிட்டதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சிகள் வேட்பாளர் தேர்வு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.

பாஜ தரப்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.

இதற்கிடையில், தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய விருப்பம் இருப்பதாகவும், தாம் போட்டியிட விருப்பமில்லை என்றும் அண்ணாமலை கட்சி தலைமையிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது ஆதரவாளர்கள் ஐந்து பேருக்கு சீட் வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பாஜ வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.