மேற்காசியப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
தகவலின்படி, இஸ்ரேல்–ஈரான் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழி மூடப்பட்டதால், எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வழக்கமான விநியோக சங்கிலியில் தடைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் மேற்காசியாவை மட்டும் நம்பாமல், மாற்று வழிகளிலும் மாற்று நாடுகளிடமிருந்தும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, அடுத்த மாத தேவைக்காக ரஷ்யாவிடம் இருந்து 6 கோடி பேரல் வாங்கும் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது பிப்ரவரியில் வாங்கிய அளவை விட அதிகம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘ப்ளூம்பெர்க்’ அறிக்கையை மேற்கோள் காட்டி வெளியான தகவலின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் வெனிசுலாவிலிருந்து 80 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது; இது 2020ல் இறக்குமதி செய்த அளவை விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




