இந்தியாவுக்கான ஈரான் தூதரகம், காஷ்மீரிலிருந்து ஈரான் மக்களுக்கு அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்த சமூக வலைதள பதிவுகளை திடீரென நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த முடிவுக்குப் பின்னணி குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
செய்தி குறிப்பின்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது போர் தொடுத்து வருவதால் அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து காஷ்மீரில் உள்ள முஸ்லிம்கள் ஒன்றிணைந்து உதவி செய்ய முடிவு செய்து, தங்கச்சங்கிலி உள்ளிட்ட பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரொக்கம், உணவு மற்றும் மருந்துகளை சேகரித்து அனுப்பினர்.
இந்த உதவிப் பொருட்களின் புகைப்படங்களை தூதரகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இக்கட்டான சூழலில் உதவிய “காஷ்மீரை சேர்ந்த அன்பு நிறைந்த மக்களுக்கு” மனமார்ந்த நன்றி தெரிவித்ததுடன், இந்த உதவியை மறக்க மாட்டோம் என்றும் இந்தியாவுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பின்னர் அந்த பதிவுகள் நீக்கப்பட்டன. காஷ்மீரை இந்தியாவின் பகுதியாக குறிப்பிடப்பட்டதாக பாகிஸ்தானை சேர்ந்த இணைய பயனாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பாகிஸ்தான் அரசு ஈரானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுவதால், அதனாலேயே பதிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல் தெரிவிக்கிறது.




