மேற்காசியாவின் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்தான் நோக்கிச் சென்ற கச்சா எண்ணெய் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘செலன்’ என்ற பெயருடைய அந்த கப்பல், பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் நோக்கி பயணித்தபோது, ஈரான் அனுமதி மறுத்து திரும்பச் செய்ததாக கூறப்படுகிறது.
உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுகிறது; இது ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பின்னர் இந்த கடல் பாதையை ஈரான் முடக்கியதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் குறைந்த அளவில் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதித்துள்ளதாகவும், மேலும் சமீபத்தில் ஜலசந்தியை கடக்க ரூ. 18.8 கோடி கட்டணம் வசூலிக்கும் முறையை ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனுமதி பெறாமல் ஜலசந்தியை கடக்க முயன்றதாக கூறி ஈரான் புரட்சிகர ராணுவம் கப்பலை தடுத்து நிறுத்தி எச்சரித்தது. இதையடுத்து அந்த கப்பல் மீண்டும் பாரசீக வளைகுடா நோக்கி திரும்பியதாகவும், இந்த தகவலை காபூலில் உள்ள ஈரான் தூதரகம் உறுதி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




