சென்னை: சட்டசபை தேர்தல் சூழல் நெருங்கும் நிலையில், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ‘மலைக்கள்ளன்’ என்ற பெயர்ச்சொல்லை மறுத்து, தன்னை ‘இயற்கை காதலன்’ என கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

கன்னியாகுமரியில் கனிமவள கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும், கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அமைச்சர் மற்றும் அவரது மகன் இருப்பதாக பலர் குற்றஞ்சாட்டிய நிலையில், மனோ தங்கராஜ் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சியினர் அவரை ‘மலைக்கள்ளன்’ என அழைக்கத் தொடங்கினர். அமைச்சர் கார் சென்றால் மக்கள் கிண்டலடிக்கும் அளவிற்கு அந்த பெயர் பரவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கிடையே, கேரளாவிற்கு கனிமவளம் கொண்டு செல்வதை தடுக்க தாம் எடுத்த முயற்சிகள் குறித்து சமூக வலைதளத்தில் அமைச்சர் தரப்பு பட்டியலிட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் 44 ஆக இருந்த குவாரிகளை நான்காக குறைத்தது மனோ தங்கராஜ் தான் என்றும், ‘மலைக்கள்ளன்’ அல்ல ‘உண்மையான இயற்கை காதலன்’ என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் நேரத்தில் பழைய விவகாரங்கள் மீண்டும் கிளம்பும் வகையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் வழியாகவே கனிமவள கொள்ளை குறித்த பிரச்னை பேசப்படுவதால் தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.