சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவிடம் கூட்டணி கட்சிகள் தங்களின் விருப்பத் தொகுதிகள் பட்டியலை சமர்ப்பித்து வருகின்றன.

அதேபோல் மதிமுக நிர்வாகிகளும் திமுக குழுவை சந்தித்து, போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கினர். இதையடுத்து மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகள் எவை என்பது குறித்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே கட்சி தலைமையால் அறிவிக்கப்படும் என அவர் கூறினார். ஒதுக்கீட்டை வரவேற்றாலும், கட்சியின் தகுதிக்கேற்ற அளவில் தொகுதிகள் வழங்கப்படவில்லை என்ற வருத்தம் இருப்பதாகவும், “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்” எனவும் தெரிவித்தார்.

மேலும், நான்கு தொகுதிகளிலும் தங்கள் சின்னத்தில் போட்டியிட முடியாதது குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டார். ஒப்பந்தத்தின் படி, நான்கு தொகுதிகளில் மூன்றில் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் மதிமுக சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.