திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூரில் நிறைவு செய்ய உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (28), தேமுதிக (10), விசிக (8), இந்திய கம்யூனிஸ்ட் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (5), மதிமுக (4), இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (2), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (2), மனிதநேய மக்கள் கட்சி (2) ஆகியவற்றுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட சுற்றுப்பயண விவரப்படி ஏப்ரல் 2 முதல் 21 வரை பல மாவட்டங்களில் பிரசாரம் நடைபெறுகிறது. ஜெயங்கொண்டம், திருவெறும்பூர், கரூர், திருப்பூர், நாகர்கோவில், திருநெல்வேலி, திருவள்ளூர், மேட்டுப்பாளையம், சூலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ஆரணி, மதுரை, விருதுநகர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நெய்வேலி, விழுப்புரம், ராணிப்பேட்டை, சேலம், திண்டுக்கல், ராமநாதபுரம், செங்கல்பட்டு, பெரம்பலூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் ஏப்ரல் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இந்த வார இறுதியில் வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




