சென்னை: தி.மு.க. தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்து கூட்டணிக் கட்சிகளுடனும் ஆலோசித்து நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், உரிய அளவில் தொகுதிகளைப் பகிர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வி.சி.க., இ.கம்யூ., மா.கம்யூ., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பேசி முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

கூட்டணியின் வெற்றியே முக்கியம் என ம.நீ.ம. தலைவர் கமல் வெளியிட்ட அறிக்கையை வரவேற்பதாக ஸ்டாலின் தெரிவித்தார். கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்த்தவர்கள் தற்போது தங்கள் கற்பனைக்கேற்ப விமர்சனங்களைப் பரப்ப முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

வேட்பாளர் நேர்காணல் என்பது தலைமைக்கும் தொண்டர்களுக்கும் இடையிலான உறவின் வெளிப்பாடு எனக் கூறிய அவர், இந்த முறை 16,500 பேர் பங்கேற்றதாகவும், தினமும் 10 மணி நேரத்திற்குக் குறையாமல் ‘மாரத்தான்’ போல நேர்காணல் நடந்ததாகவும் தெரிவித்தார்.

2026 தேர்தல் களத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்கள் சேர்த்து 175 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காணும் என அவர் கூறினார். மேலும் கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள்-சுத்தி-நட்சத்திரம், பானை, ஏணி போன்ற சின்னங்களும் கூட்டணியின் சின்னங்களே என்றும், 234 தொகுதிகளும் கூட்டணிக்கே எனவும் அவர் வலியுறுத்தினார்.