அடுத்த ஆண்டு முதல் நான்கு ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

முப்படைகளில் இளைஞர்களை நான்கு ஆண்டுகள் தற்காலிகமாக பணியமர்த்தும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் தேர்வாகுபவர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். பணிக்கால முடிவில் சிறப்பாக செயல்படும் 25% பேர் நிரந்தரமாக்கப்படுவர்; மீதமுள்ளவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

இவர்களின் மறுவாழ்வு மற்றும் மறுபணியமர்த்தலை கருத்தில் கொண்டு, எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்திய பிரிவுகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதேபோல் மாநிலங்களும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே இக்கடிதத்தின் நோக்கம்.

ஹிமாச்சலப் பிரதேச ராணுவ வீரர் நலத்துறையின் முன்னாள் இயக்குநர் பிரிகேடியர் மதன் ஷீல் சர்மா கூறுகையில், 2027ல் நான்கு ஆண்டு சேவையை முடிக்கும் அக்னி வீரர்களுக்காக பல்வேறு பணிகளில் 20% ஒதுக்கீடு செய்யுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார்.

வனக் காவலர், சுரங்கக் காவலர், கான்ஸ்டபிள், தீயணைப்பு வீரர், குதிரைப்படை, சிறை காவலர், சிறப்பு போலீஸ் அதிகாரி மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை போன்ற பணிகளில் இந்த இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்றும் அவர் கூறினார். ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் போலீஸ் உள்ளிட்ட துறைகளில் அக்னி வீரர்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளன.