தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் புதிய கட்சியாக சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் இணைந்துள்ளது. அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைவர் பரதன் அறிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அவர்களை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பரதன், தங்கள் கட்சி அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடும் என கூறினார்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க்கு 27, பா.ம.க.க்கு 18, அ.ம.மு.க.க்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீட்டுக்குப் பிறகு மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என கூறப்படுகிறது. சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கான ஒரு தொகுதி, ஸ்ரீரங்கம் அல்லது மண்ணச்சநல்லூர் ஆகிய இரண்டில், நாளை இபிஎஸ் எந்த தொகுதியை அறிவிக்கிறாரோ அதன்படி இறுதி செய்யப்படும் என பரதன் தெரிவித்தார்.
மேலும், மத்திய மண்டலத்தில் 45 தொகுதிகளின் முடிவை நிர்ணயிக்கக் கூடிய சக்தி தங்களிடம் இருப்பதாகவும், ஸ்ரீரங்கம் தொகுதியை விரும்பி கேட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மண்ணச்சநல்லூர் வழங்கப்பட்டாலும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.




