சென்னை: 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க வேண்டிய கண்காணிப்பு பணிகள், பள்ளிகளுக்கு ‘எதை செய்தாலும் தப்பு’ என்ற நிலையாக மாறிவிட்டதாக தலைமை ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8.27 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், அது இன்று நிறைவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதும் நிலையில், ஏப். 6 வரை நடைபெறுகிறது. முறைகேடுகளைத் தவிர்க்க 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தனை ஏற்பாடுகள் இருந்தும், தேர்வறை கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு பின்னணி காரணமாக, கடந்த ஆண்டை விட அதிக தேர்ச்சி சதவீதம் பெற வேண்டும் என்ற அரசின் உத்தரவு இருப்பதாகவும், அதனால் ‘காப்பி’ முயற்சிக்கும் மாணவர்களிடம் கடுமை காட்ட வேண்டாம் என பறக்கும் படையினருக்கு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மேலும், மாணவர்கள் புத்தகங்களை ‘மினி ஜெராக்ஸ்’ எடுத்து நவீன முறைகளில் பிட் வைத்துவருவதாகவும், கண்காணிப்பில் ஒழுங்கீனத்தை கண்டால், எழுதாமல் பிட் வைத்திருந்தால் கண்டித்து விட்டுவிடச் சொல்லப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவர்களை சோதனை செய்தால் அது மன உளைச்சலாக கருதப்படும் என கூறப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மாணவியரின் அருகில் சென்று ஆண் ஆசிரியர்கள் கண்காணித்தால் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் எழும் அபாயம் இருப்பதாகவும் தலைமை ஆசிரியர்கள் கூறினர். இதனால் பிட் அடித்தாலும் பிரச்னை, பிடித்தாலும் பிரச்னை என்ற சூழல் உருவாகி, கண்காணிப்பு பணியே தலைவலியாக மாறிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.