கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செய்ய வழிவகுத்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்தது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்கும் போது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில் சொத்துகளில் பல ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டு, 2025 செப்டம்பர் 30-ஆம் தேதி வருவாய்த்துறை வெளியிட்ட அரசாணை சவால் செய்யப்பட்டது. அந்த அரசாணை கோவில் மற்றும் வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்யும் வகையில் இருந்ததாக மனுதாரர் கூறினார்.
பதிவுத்துறையில் ‘பூஜ்ஜியம் மதிப்பு’ என பதிவேற்றம் செய்யவும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கவும் அந்தத் துறைக்கு அதிகாரம் இல்லை; இது அரசியலமைப்புக்கு முரணானது எனவும் மனுவில் வாதிடப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி இரு நீதிபதிகள் அமர்வு அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
நேற்று நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு முன் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.ராமன், அந்த அரசாணை பிப்ரவரி 19-ஆம் தேதி திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார். சட்டத்திற்குட்பட்டு புதிய திட்டம் வகுத்து, புதிதாக அரசாணை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசாணை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் மனு காலாவதியானதாகக் கருதி, நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.




