டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிராந்திய வான்வழி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ‘உடான்’ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 100 புதிய விமான நிலையங்களும் 200 ஹெலிபேடுகளும் உருவாக்கப்பட உள்ளன. மலைப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்கள், தீவுப் பகுதிகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ₹28,840 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தில் சுமார் 80% முதல் 90% வரை மத்திய அரசு ஆதரவு நிதி வழங்கும் என்றும், இந்த உதவி ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. விமான நிலையங்கள் கட்ட ₹12,000 கோடியும், ஹெலிபேடுகள் அமைக்க ₹3,600 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026-27 முதல் 2035-36 வரை 10 ஆண்டுகள் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதனுடன், வெளிநாட்டவர் வருகை, விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளை கண்காணிக்கும் IVFRDT திட்டத்தை ₹1,800 கோடி செலவில் மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நீட்டிப்பு வரும் ஏப்ரல் 1 முதல் 2031 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விசா வழங்கல் மற்றும் வெளிநாட்டவர் வருகை பதிவுகளை ஒருங்கிணைப்பதே திட்டத்தின் முக்கிய நோக்கம். மொபைல் சேவைகள், தானியங்கி கியோஸ்க்குகள், இ-கேட்கள் மூலம் பயணிகள் நடமாட்டம் எளிதாக்கப்படும். தற்போது 13 முக்கிய விமான நிலையங்களில் இ-கேட்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், இதனால் குடியேற்ற சோதனை நேரம் சுமார் 3 நிமிடங்களில் இருந்து 30 வினாடிகளாக குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்; இந்த நவீனமயமாக்கல் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தி பயணிகளுக்கு தடையற்ற சேவையை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.




