பாகிஸ்தானில் உள்ள ஒருவருக்கு முக்கிய இடங்களின் படங்கள், வீடியோக்களை அனுப்பியதாக கூறப்படும் உளவு வழக்கில் உத்தர பிரதேசத்தில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி டில்லியில் பதுங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

காஜியாபாத் மாவட்டத்தின் கவுசாம்பி பகுதியில் சிலர் நாட்டின் முக்கிய இடங்களை படம் பிடித்து பாகிஸ்தானில் உள்ள நபருக்கு அனுப்புவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அந்த நடவடிக்கையில் முதலில் ஆறு பேர் பிடிபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, கடந்த 21ம் தேதி நேபாளத்தைச் சேர்ந்த கணேஷ் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர். தொடர்ந்து 22ம் தேதி நவுஷத் அலி, அவரது கூட்டாளி மீரா மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்படும் சமீர் என்ற ‘ஷூட்டர்’ டில்லியில் கைது செய்யப்பட்டார். அவருடன் சமீர் என்ற மற்றொரு நபரும், ஷிவ்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை ஆறு சிறுவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஜியாபாத் கூடுதல் போலீஸ் கமிஷனர் கரண் நாயர் கூறுகையில், டில்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ரயில்வே நிலையங்கள், ராணுவ முகாம்கள், போலீஸ் தலைமை அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று உளவு பார்த்த நவுஷத் அலி, அதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பாகிஸ்தானில் உள்ள சர்தார் (ஜோராவர் சிங்) என்பவருக்கு அனுப்பியதாக தெரிவித்தார். ஒரு முறை படம் எடுத்து தருபவர்களுக்கு ரூ.5,000 வரை வழங்கப்பட்டதாகவும், பஞ்சாப் எல்லை வழியாக சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் கூறினர்.