2024-25ல் தேசிய கட்சிகளின் நன்கொடையில் பா.ஜ.க. முன்னிலை

புதுடில்லி: 2024-25 நிதியாண்டில், நாட்டின் பிற தேசிய கட்சிகளை விட பா.ஜ.க.க்கு மிக அதிக அளவில் நன்கொடை கிடைத்துள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, அந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு மொத்தமாக 11,343 பங்களிப்பாளர்கள் மூலம் ரூ.6,648.56 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதில் பா.ஜ.க.க்கு மட்டும் ரூ.6,074.01 கோடி கிடைத்ததாகவும், அடுத்ததாக காங்கிரஸ் கட்சிக்கு ரூ.517.39 கோடி கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றின் நன்கொடைகளை ஒன்றாக சேர்த்தாலும், பா.ஜ.க. பெற்ற தொகை சுமார் 10 மடங்கு அதிகம் என அறிக்கை குறிப்பிட்டது. மேலும், கடந்த 19 ஆண்டுகளாக ரூ.20,000-ஐ மீறும் நன்கொடைகளை பெறவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளதாகவும் ஏ.டி.ஆர் கூறியுள்ளது.

மொத்த நன்கொடையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 92.18% ஆக இருந்து ரூ.6,128.78 கோடியாக உள்ளது; தனிநபர்கள் ரூ.505.66 கோடி அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர். கார்ப்பரேட் நன்கொடைகள் மூலம் பா.ஜ.க. ரூ.5,717.16 கோடியையும், தனிநபர்களிடமிருந்து ரூ.345.94 கோடியையும் திரட்டியதாகவும்; காங்கிரஸ் கார்ப்பரேட் வழியாக ரூ.383.86 கோடியும், தனிநபர்கள் வழியாக ரூ.132.39 கோடியும் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் அறக்கட்டளைகளில் ‘புரூடென்ட்’ அதிகபட்சமாக ரூ.2,413.46 கோடி வழங்கி முன்னிலை வகித்ததாக அறிக்கை கூறுகிறது. இதில் பா.ஜ.க.க்கு ரூ.2,180.71 கோடி, காங்கிரஸுக்கு ரூ.216.33 கோடி, ஆம் ஆத்மிக்கு ரூ.16.41 கோடி கிடைத்ததாகவும், ‘சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியா’ நிறுவனம் பா.ஜ.க.க்கு ரூ.100 கோடி நன்கொடை வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.