சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை பாஜ முன்னாள் மாநில தலைவர் கே.அண்ணாமலை கடுமையாகக் கண்டித்துள்ளார். உண்மையை வெளிக்கொண்டு வர முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில், தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது துரதிருஷ்டவசமானது என்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
புகார் அளித்த மாணவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த பேராசிரியர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்தார். மேலும் பல மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், அந்த பேராசிரியரின் பாடப்பிரிவு மாணவிகளிடம் பாதுகாப்பான முறையிலும் ரகசியமாகவும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த விவகாரத்தில் தமிழக போலீசார் முழுமையான விசாரணை நடத்தி, அனைத்து மாணவிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், குற்றம் நிரூபித்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அண்ணா பல்கலையில் உள்ள PoSH (பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணைக் குழு) உண்மையில் செயல்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பிய அவர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண்கள் மற்றும் மாணவிகள் தயங்காமல் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும், உங்கள் துணிச்சலே குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.




