சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர், மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 26 மாலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், அந்த பேராசிரியர் நேரடியாகவும், செல்போனில் ஆபாசமான செய்திகளை அனுப்பியும் தன்னை பாலியல் தொல்லை செய்ததாக மாணவி குற்றம்சாட்டினார். இதை வெளியே கூறினால் பாதிப்பு ஏற்படும் என மிரட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், தன்னுடன் படிக்கும் சில தோழிகளுக்கும் இதேபோன்ற தொல்லை நடந்ததாகவும், இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் குழுவிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் மாணவி குறிப்பிட்டார். போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.
காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலை வளாகத்தில் மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் புகாரின் அடிப்படையில் பேராசிரியரை இடைநீக்கம் செய்வதாக பல்கலை நிர்வாகமும் உத்தரவிட்டுள்ளது.




