சென்னையில் அசோக் நகரில் நடந்த வாகன தணிக்கையில், ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் நடந்த சோதனையில், நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை ஏற்றிச் சென்ற 21 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டன. 20 வாகனங்களில் இருந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்த நிலையில், ஒரு வாகனத்தில் இருந்த பொருட்களுக்கு எந்த ஆதார ஆவணமும் இல்லை.

இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்த ரூ.77 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், கிண்டியைச் சேர்ந்த பிவிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சவுகார்பேட்டையைச் சேர்ந்த வியாபாரிகளிடமிருந்து வாங்கப்பட்ட நகைகளை பிற மாநிலங்களுக்கு அனுப்பியதாக தெரியவந்தது; இது தொடர்பாக தனியார் நிறுவனத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்பிலான பொருட்கள் மாநிலம் முழுவதும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.