எல்பிஜி விநியோகக் கட்டுப்பாடு: சென்னையில் ஸ்நாக்ஸ் விலை உயர்வு
சென்னையில் வணிக எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, டீக்கடைகள் மற்றும் உணவகங்களில் வடை, சமோசா, பஜ்ஜி போன்ற பிரபலமான பொருட்களின் விலை 50% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், காஸ் போன்றவை கப்பல் மூலம் வருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், இதன் தொடர்ச்சியாக நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தெருவோர டிபன் கடைகள் முதல் உயர்தர ஹோட்டல்கள் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிலிண்டர் கிடைக்காததால் பலர் கடைகளை மூடுவதாகவும், சில ஹோட்டல்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் இயங்குவதாகவும், சில இடங்களில் உணவுப் பட்டியல் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ள சந்தையில் ஒரு வணிக சிலிண்டர் ரூ.5,000 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. செலவுகளை சமாளிக்க டீக்கடைகளில் ரூ.10க்கு விற்கப்பட்ட வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ரூ.15 ஆக உயர்ந்துள்ளன; சில ஹோட்டல்களில் ரூ.15 இருந்தவை ரூ.20 ஆக மாற்றப்பட்டுள்ளன. சில டீக்கடைகளில் வடை விற்பனை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் கணேசன், அதிக விலை கொடுத்தாலும் சிலிண்டர் கிடைப்பது கடினமாக இருப்பதாக கூறி, மின்சார அடுப்பு மற்றும் விறகு அடுப்பில் சமையல் செய்து சமாளிப்பதாக தெரிவித்தார். நிலைமை நீடித்தால் நிரந்தர மூடல் மற்றும் ஊழியர்களின் வேலை இழப்பு அபாயம் ஏற்படும் என எச்சரித்த அவர், வணிக சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விநியோகம் சீரானதும் விலைகள் குறைக்கப்படும் என்றும் கூறினார்.




