கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ‘பா.ஜ.க. டீம்’ என ராகுல் காந்தி விமர்சித்ததற்கு, தமிழக மா.கம்யூ. முன்னாள் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது ராகுலின் “முதிர்ச்சியற்ற போக்கு” என அவர் கூறினார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அங்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, காங்கிரஸின் “பதவி மோக” அணுகுமுறையால் தளர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

தி.மு.க., மா.கம்யூ., வி.சி. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை என்றும், இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க.வும் காங்கிரசும் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இனி வாபஸ் பெற முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலை பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்கும் கூட்டணியின் வலிமையை குறைத்துள்ளதாக அவர் கூறினார். புதுச்சேரியில் உள்ள தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் நலனை விட பதவிக்கே முன்னுரிமை தருவதாகவும் விமர்சித்தார்.

இதனால் லாஸ்பேட்டை மற்றும் திருபுவனம் தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், இந்திய கம்யூனிஸ்ட், வி.சி., ம.தி.மு.க. ஆகியோருடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார். மற்ற தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியை தோற்கடிக்க பாடுபடுவோம் எனவும் கூறினார்.