தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களின் வருமான ஆதாரம் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் வேட்பாளரின் மனைவி உள்ளிட்ட அவரை சார்ந்தவர்களின் விவரங்களும் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏப்.23 அன்று ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30 காலை 11 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால், வேட்புமனு தாக்கலுக்கு நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுவுடன் ஐந்து ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு விவரங்களை இணைக்க வேண்டும் என ஆணையம் கூறியுள்ளது. வருமான வரி செலுத்தவில்லை என்றால் அதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்தால் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; வழக்குகளில் தண்டனை பெற்றதா இல்லையா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மேலும் கையில் உள்ள ரொக்கம், வங்கி இருப்பு, முதலீடுகள், வாகனங்கள், தங்கம்-வெள்ளி, நிலம் மற்றும் வீடு உள்ளிட்ட சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும். கப்பல், படகு அல்லது ஹெலிகாப்டர் இருந்தால் பதிவெண் உடன் குறிப்பிட வேண்டும்; வேட்பாளர் மற்றும் அவரை சார்ந்தோரின் வருமானம் எந்த வழியில் கிடைத்தது என்பதையும் விளக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.