2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், வரும் தேர்தலில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டசபைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜ கூட்டணி) அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த முறை தாம் சாத்தூரில் போட்டியிடுவதாகவும் கூறினார்.
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவும் சூழலில் மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதேபோல் தமிழக அரசும் தங்களுடைய பங்கிற்கு வரியை குறைக்க வேண்டும் என்றார். அதிமுக-பாஜ இடப்பங்கீடு பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் நடந்ததாகவும், இதுகுறித்த அவதூறு பிரசாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
தொகுதி பரிமாற்றத்தின் கீழ் இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக கூறிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பாஜ கேட்டு வாங்கியது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இல்லை என்றார். அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளை கருத்தில் கொள்ளவில்லை என விமர்சித்த அவர், பாலியல் குற்றம் இல்லாத தமிழகம், கஞ்சா போதை இல்லாத தமிழகம் வேண்டும் என்றும் தெரிவித்தார். பெண்கள் குறித்து திமுகவினர் இழிவாக பேசியதாக கூறி, நடிகர் விஜய் அளித்த புகாரின் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.




