புதுடில்லி: கோவிட் காலத்தில் இருந்ததைப் போல இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சில தலைவர்கள் ஊரடங்கு குறித்து பேசுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அரசியல் காரணங்களுக்காக அச்சத்தை உருவாக்குவது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார்.

ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாகவும், மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க முடியும் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதற்கு முன், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் சூழ்நிலை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான இடையூறுகள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்வதை முன்னிட்டு நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே கலால் வரி குறைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஊரடங்கு விதிப்பது தொடர்பான எந்தத் திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் அவர் கூறினார்.

அறிக்கையில், உலகளாவிய நிலைமை நிச்சயமற்றதாக இருப்பதால் தொடர்ந்து உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதாகவும், எரிபொருள், எரிசக்தி மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் தடையின்றி தொடர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புரி தெரிவித்தார். ஊரடங்கு குறித்து பரவும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், தேவையானபோது சரியான நேரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார்.