நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்றும், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி. விநியோகம் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அறிக்கையில், உலகின் நான்காவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நாடாகவும், ஐந்தாவது பெரிய பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதியாளராகவும் இந்தியா இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு எரிபொருள் வழங்கும் நிலையில், நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சில்லரை எரிபொருள் நிலையங்கள் எந்த பாதிப்பும் இன்றி இயங்கி, போதுமான கையிருப்புடன் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.
சில இடங்களில் மட்டும் தேவையற்ற பயம் காரணமாக எரிபொருள் நிலையங்கள் முன் கூட்டம் ஏற்பட்டதாகவும், இது சமூக ஊடகங்களில் பெரிதுபடுத்தப்பட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டது. மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமைச்சகம், எண்ணெய் நிறுவனங்களின் கிடங்குகள் இரவு முழுவதும் செயல்படுவதாகவும், தடையற்ற விநியோகத்துக்காக நிலையங்களுக்கு கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் இருந்தாலும், முன்பை விட 40க்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்களிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் பெறுவதாக கூறப்பட்டது. அடுத்த ஆறு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது என்ற தகவல்கள் தவறானவை என்றும், அடுத்த 74 நாட்களுக்கு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அமைச்சகம் விளக்கம் அளித்தது.
மேலும், கூடுதல் கச்சா எண்ணெய் கொள்முதல் நடைபெற்று வருவதாகவும், உள்நாட்டு எல்.பி.ஜி. உற்பத்தி 40% உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8 லட்சம் டன் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாள்தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுவதாகவும், பதுக்கலைத் தடுக்க வணிக ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




