கேரள முதல்வர் பினராய் விஜயன், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பகிரங்கமாக விமர்சித்து, தேசிய அளவிலான தலைவராக இருந்தாலும் அவருக்கு அரசியல் அனுபவம் போதாது என்று கூறினார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத் தலைவருக்கு இருக்கும் அளவிலான புரிதலும் ராகுலிடம் இல்லை என்றும், விஷயங்களை தெளிவாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினார். அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளாதது போன்ற பண்புகள் ஒரு சிறந்த அரசியல் தலைவருக்கு பொருந்தாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் பா.ஜ.க.வின் “பி டீம்” போல செயல்படுகிறது எனவும், பா.ஜ.க. வெற்றிக்கு மறைமுகமாக உதவுகிறது எனவும் விஜயன் கூறினார். டில்லி, ஹரியானா, பீஹார் சட்டசபைத் தேர்தல்களில் கூட்டணி கட்சிகளை இணைத்து செல்லாமல் காங்கிரஸ் தனித்து நின்றதால் பா.ஜ.க. எளிதில் வென்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய விசாரணை முகமைகள் தன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ராகுலின் கருத்தை குறிப்பிட்ட விஜயன், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது காங்கிரஸ் கொண்டாடியதாகவும் கூறினார். கெஜ்ரிவால் விடுதலையானது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டுக்கும் பலத்த அடியாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீஷன், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நற்பெயர் பெறவே பினராய் விஜயன் ராகுலை கடுமையாக விமர்சிக்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும், மத்திய விசாரணை முகமைகளின் அழுத்தத்திலிருந்து தப்பிக்கவே இந்த விமர்சனங்கள் எனவும், 2024 லோக்சபா தேர்தல் காலத்தில் கருவன்னூர் சேவை கூட்டுறவு வங்கி வழக்கை வைத்து பா.ஜ.க. மிரட்டியதாகவும் அவர் கூறினார்.