நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொகுதியில் உள்ள இரண்டு அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் ஜாதி அடிப்படையில் பிரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்காலனி மற்றும் புதுக்காலனி வளவு பகுதிகளில், 48 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகின்றன. இரு மையங்களிலும் தனித்தனி சமையலறை, கழிப்பறை, அமைப்பாளர் மற்றும் சமையலர் என தனித்தனி ஏற்பாடுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் கூறுவதன்படி, ஒரு மையத்தில் 15 பட்டியல் சமூக குழந்தைகளும், மற்றொரு மையத்தில் 18 பிற சமூக குழந்தைகளும் உள்ளனர்; இந்த நடைமுறை பல தசாப்தங்களாக தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. பிற சமூக குழந்தைகள் சென்ற மையத்தின் கட்டிடம் சேதமடைந்த நிலையில், தற்போதைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புதிய கட்டிடத்தில் அனைத்து குழந்தைகளையும் பாகுபாடின்றி ஒன்றாக அமர வைக்க வேண்டும் என மக்கள் கோரியதாகவும், திறப்பு விழாவுக்கு பல மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை எனவும் குற்றம்சாட்டினர். இப்பகுதியை சேர்ந்த பூபதி, தன் சிறுவயதிலிருந்தே இந்த பிரிப்பு இருந்ததாக கூறி, உடனடி நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.
இதற்கிடையே, “நவீன தீண்டாமை” எனக் குறிப்பிட்டு பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். புதன்கிழமை ஆர்.டி.ஓ. சாந்தி மற்றும் தாசில்தார் சசிகுமார் ஆகியோர் மக்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். நிர்வாக வசதிக்காக மையங்கள் தனித்தனியாக உள்ளன; விருப்பமிருந்தால் குழந்தைகள் மற்ற மையத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்; வேறு எந்த பாகுபாடும் இல்லை என சாந்தி தெரிவித்தார்.




