ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்தம் தவிர பிற மதங்களுக்கு மாறுபவர்கள் பட்டியலின (எஸ்.சி.) அந்தஸ்தை கோர முடியாது என்றும், மதமாற்றம் நிகழும் தருணத்திலேயே முன்பு அனுபவித்த எஸ்.சி. அந்தஸ்து இழக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு 1950ஆம் ஆண்டு பட்டியலின வகுப்புகள் தொடர்பான அரசியல் சாசன உத்தரவை நீதிமன்றம் மேற்கோள் காட்டியது.

ஆந்திராவைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி போதகரான நிலையில், ராமிரெட்டி என்பவர் தன்னை ஜாதி ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் அமர்வு, தீர்ப்பின் முழு விவரத்தில், பிற மதத்திற்கு மாறியவர் மீண்டும் ஹிந்து/சீக்கிய/பவுத்த மதத்திற்கு தாய் மதம் திரும்பி எஸ்.சி. அந்தஸ்தை பெற விரும்பினால், மூன்று வகை ஆதாரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தெளிவுபடுத்தியுள்ளது.

முதலில், 1950 அரசியல் சாசன உத்தரவின் கீழ் அறிவிக்கப்பட்ட ஜாதியில் தான் பிறந்தவர் என்பதற்கான தெளிவான ஆரம்பகால ஆதாரம் தேவை. அடுத்ததாக, மாற்றிய மதத்தை முழுமையாகத் துறந்து உண்மையாக தாய் மதம் திரும்பியதற்கான நம்பகமான சான்றுகள் இருக்க வேண்டும்; மேலும் பழைய ஜாதியின் சடங்குகள், பழக்கவழக்கங்கள், வழிபாடுகளை பின்பற்றுவதாகவும் காட்ட வேண்டும். மூன்றாவது, தாய் மதம் திரும்பியதை சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஏற்றுக் கொண்டதற்கான சமூக அங்கீகாரச் சான்று அவசியம்; தனிப்பட்ட அறிவிப்பு மட்டும் போதாது என நீதிமன்றம் கூறியது.

இந்த மூன்றில் எந்த ஒரு ஆதாரமும் இல்லையெனில் மீண்டும் எஸ்.சி. அந்தஸ்தை கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பழங்குடியினர் (எஸ்.டி.) விவகாரத்தில் மதமாற்றம் உடனடி தடையாக கருதப்படாது என்றாலும், பழங்குடியின மரபுகள் மற்றும் கலாசார விழுமியங்களை தொடர்ந்து பின்பற்றுகிறார்களா என்பதையும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரா என்பதையும் நிரூபிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.